Friday, October 20, 2017

பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்படவேண்டும். இலங்கை ஆசிரியர் சங்கம் - சட்டமா அதிபருக்கு கடிதம்.



பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்படவேண்டும்.
இலங்கை ஆசிரியர் சங்கம் - சட்டமா அதிபருக்கு கடிதம்.

கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குழப்பிட்டிச் சந்தியில் வைத்து; சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஸன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக - இன்றுடன் ஒருவருடம் கடந்த நிலையிலும் - உயர் நீதிமன்றத்தில் உரியமுறையில் வழக்குத்தாக்கல் செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக – முதலில் விபத்தினாலேயே மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறிய நிலையில் - ஐந்து பொலிஸாரைக் கைது செய்து – அவர்களுக்கும் பிணைவழங்கப்பட்ட நிலையில் - உயர் நீதி மன்றத்தில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படாதமையால் மாணவர்களின் மரணம் தொடர்பாக உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை..

பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால் - உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அவ்வாறெனில் – உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருப்பாரானால் - அம்மாணவர்கள் சுடப்பட்டு இறந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இவ்விரு மாணவர்களின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி 25.10.2016 அன்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது – இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடைபெறும் என ஆளுநரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் - அதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே – உடனடியாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருமாணவர்களின் மரணம் தொடர்பாக – விசாரணையை துரிதப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டமா அதிபரிருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளது.  குற்றத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


No comments:

Post a Comment