Wednesday, June 14, 2017

வடமாகாண முதலமைச்சர் தொடர்பான நிலைப்பாட்டை வாக்களித்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அரசியல்வாதிகளல்ல. இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு


வடமாகாணத்தில் அமைச்சுக்களின் முறைகேடுகளை குறிப்பிட்டு -அமைச்சரவை மாற்றத்தை கோரி முன்னர் 16 வடமாகாண ஆளும் கட்சியினர் கையெழுத்திட்டு வழங்கியிருந்ததுடன் முறைகேடுகளை விசாரிக்கக்கோரி வடமாகாண முதலமைச்சரையும் வற்புறுத்திவந்தநிலையில் - விசாரணையில் அமைச்சர்களின் முறைகேடுகள் வெளிவந்த நிலையில் - முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றபோது இன்று வடமாகாண முதலமைச்சரை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மக்கள் ஊழலற்ற ஆட்சிகளையே எப்போதும் விரும்புவர். விசாரணை குழுவின் அறிக்கையை விட மக்களின் மனோநிலைக்கமையவே - குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களை தமது பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானம் மக்களுக்கெதிரானதாகவே அமையும். பல உயிர் தியாகங்கள் நடந்தேறிய தமிழ் மண்ணில் - அமைச்சுப்பதவியை கூட தியாகம் செய்யமுடியாத நிலைக்கு சென்றுள்ளமை வேதனையான விடயமாகும்.
நல்லாட்சி என கூறி கால்பதித்த அரசாங்கமே வாக்குறுதி அளித்தும் மக்களை ஏமாற்றிவரும் வேளையில் - முன்னுதாரணமாக செயற்பட்ட வடமாகாண முதல்வரை நீக்கும் செயற்பாடு - விக்னேஸ்வரணையே முதலமைச்சராக நம்பி ஏகோபித்த வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதி என்பதை வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கின்றோம்.
13 வது திருத்தச்சட்டத்துக்கு மேலாக அதிகாரத்தைக்கோரும் வட மாகாணசபை - தனது கொள்கைகளை மீறி - மாகாணசபையின் முதலமைச்சரையே நீக்கக்கோரி ஆளுநரிடம் கேட்கின்றமை தமக்கு வாக்களித்த மக்களை மலினப்படுத்தும் செயலாகும்.
வடமாகாண முதலமைச்சர் தொடர்பான நிலைப்பாட்டை வாக்களித்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அதுவே உயர்ந்தபட்ச ஜனநாயகமும் ஆகும். எனவே - வடக்கு மக்களின் அபிப்பிராயம் இன்றி முதல்வர் விக்னேஸ்வரன் அகற்றப்படுவாரானால் - ஊழல்வாதிகளுக்கு எதிரான -முதலமைச்சருக்கு ஆதரவான வெகுஜனப்போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கும் என்பதை தெரிவிக்கின்றோம்.

No comments:

Post a Comment