Monday, July 2, 2018

கல்வித்துறையினரால் 4 ஆம் திகதிய பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுவது ஏன்?

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - அமைச்சரவை அனுமதியினூடாக தகுதியற்ற - அரசியல் எடுபிடிகள் கல்வி நிர்வாகசேவைக்கும் - ஆசிரியகல்விச் சேவைக்கும் - அதிபர் சேவைக்கும் உள்வாங்கப்படல் - இலங்கைக் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

இதனால் - சேவைப் பிரமாணக்குறிப்புகளுக்கு அமைய – போட்டிப்பரீட்சைகளின் மூலம் தகுதியான ஆசிரியர்கள் - அதிபர்கள் -  கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தர்களை சேவைகளில் உள்வாங்குவதற்கு இருக்கும் சந்தர்ப்பம் பலவருடங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் - கல்விஅமைச்சு உட்பட - மாகாண மற்றும் வலயப் பாடசாலைகள் சம்மந்தமான தீர்மானங்கள் யாவும் இப்படியான தகுதியற்ற அரசியல் எடுபிடிகளின் ஆணையின் கீழ் செயற்படுமாயின் - இலங்கையின் கல்வித்துறையில் பாரிய முறைகேடுகள் நிகழும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - குறுக்கு வழியால் - உட்புகும் தகுதியற்றவர்களால் - தகுதியானவர்களின்; பதவியுயர்வுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படவுள்ளதுடன் - தகுதியானவர்கள் - தகுதியற்றவர்களின் ஆணையின் கீழ் செயற்படும் அவமானங்களும் நடைபெறும்.

கல்வித்துறையை முறையற்ற அரசியல் நியமனங்களில் இருந்து முழுமையாக விடுவிப்போம்…….

 அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் முகமூடியைப் போர்த்துக்கொண்டு;  இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் நுழைந்து கொள்ளத் துடிக்கும் - தகுதியற்ற – தமது அரசியல் அடிவருடிகளுக்கு நியமனம் வழங்குவதே அரசினது   நோக்கமாகும்.

இதனால் - ஆசிரியர்களுக்கும் - அதிபர்களுக்கும் ஏற்படவுள்ள கேடுகளையும் - அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள் !

 மேற்படி தொழில்களுக்கு முறையற்ற நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம்  ஆசிரிய சமூகத்திற்கும் - இலங்கைக் கல்வித்துறைக்கும் - கற்கவுள்ள எதிர்கால சந்ததிக்கும்  பெரும் சவாலும் அவமானமுமே - இதன் விளைவாகக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்!

 அரசியல் இலாபம் தேடும் குறுகிய மனப்பான்மையில் - முழுக் கல்வியையும் பணயம் வைத்து - இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கும் - இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவைக்கும் - இலங்கை அதிபர் சேவைக்கும் - தகுதியற்ற ஆயிரக்கணக்கானோரைப் பின்கதவால் நுழைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கின்றது. இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து - அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டது.

முதலாவதாக - மேற்படி நபர்களுக்கு பதவிவழங்காது - வேதனம் - மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பின்னர் நியமனங்களை வழங்கவுள்ளது.

 முன்னைய அரசாங்கமும் இவ்வாறு முயற்சித்தபோதும் - அவற்றை முறியடிப்பதில் நாம் வெற்றிபெற்றோம்.

இலங்கை கல்வி நிர்வாகசேவை - இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை - இலங்கை அதிபர் சேவை என்பவற்றில் இணைந்துகொள்வதற்கு பொருத்தமான நடைமுறை ஒழுங்குகள் உள்ளன. அந்த முறையான நடைமுறைகளுக்கு அமைய அச்சேவையில் உள்வாங்கப்படுவதற்கு எவ்வித அழுத்தங்களும் அரசால் கொடுக்கப்படுவதில்லை.

இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்துகொள்வதற்கு இவர்களுக்கு சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கமைய சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தும் - இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் உள்வாங்கப்படுவதானது - முறையாக நியமனம் பெறமுன்வரும் ஆசிரியர்கள் - அதிபர்கள் - பட்டதாரிகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கிறது. இதனால் - சேவையின் தரமும் புனிதமும் இல்லாது போய்விடும்.

 இவ்வாறாக - சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக வழங்கப்படும் முறையற்ற நியமனங்களால் - இலங்கை கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை - எமது ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் வெளிப்படுத்த சகல ஆசிரிய - அதிபர் - கல்விச் சேவையாளர் சங்கங்களும் - கல்வி நிர்வாகசேவை சங்கமும் இணைந்துள்ளன.

 இதன்படி - 2018.07.04 புதன்கிழமை சகல பாடசாலைகள் - வலயக்கல்விப் பணிமனைகள் - மாகாணக்கல்வித் திணைக்களங்கள் - கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிலையங்களிலும் சேவைசெய்யும் ஆசிரியர்கள்  -அதிபர்கள் - ஆசிரியகல்விச் சேவையாளர்கள் - கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் - சுகயீன விடுமுறையை அறிவித்து பணியைப்; புறக்கணித்து - எமது சமூகக் கடமையைப் பொறுப்புடன் முன்னெடுப்போம்.

No comments:

Post a Comment