Wednesday, July 4, 2018

நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வியாளர்களின் பணிப்புறக்கணிப்பு: அரச கைக்கூலிகள் போராட்டக்காரர் மீது கல்வீச்சு!


அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி தகுதியற்றவர்களுக்கு - அரசியல் ரீதியாக வழங்கப்படவுள்ள 1200 நியமனங்களை எதிர்த்து இன்று நாடுதழுவிய ரீதியில் கல்வியியலாளர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாடசாலைகளுக்கு அனைத்து ஆசிரியரும் செல்லவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையிலும் நாடுதழுவிய ரீதியில் பாடசாலைகளில் ஆசிரியர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் சுகயீன விடுகை அறிவித்து பணியைப் புறக்கணித்திருந்தனர். வடமாகாணத்தில் 60 வீதமான ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் வீழ்ச்சிகண்டிருந்தது. சில பாடசாலைகள் முற்றாக இயங்கவில்லை.  வலய - மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களும் கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் செயலிழந்திருந்தன.
இதேவேளை – கல்வி நிர்வாகசேவை - அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கள் இணைந்து பல ஆயிரகணக்கானோர் - பத்தரமுல்லையிலிருந்து இசுறுபாய கல்வியமைச்சு வரை பேரணியாக சென்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும  குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது – அரசியல் கைக்கூலிகளால் கல்வீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் சிலர் காயமடைந்தனர்.  இக்கைக்கூலிகளின் செயற்பாடு கல்வியமைச்சின் பிரதி பணிப்பாளருள் ஒருவரான  பிரியந்த பத்தேரிய தலைமையிலேயே நடைபெற்றுள்ளது.




இதன்போது - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில் -
இந்த அரசாங்கம் கைக்கூலிகளை ஏவி கல்லெறிவதை விட – முறையற்ற விதத்தில்- தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரசியல் நியமனங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதற்காக நாங்கள் 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளோம். இக் கால அவகாசத்துக்குள் வழங்கப்படவுள்ள முறையற்ற நியமனங்களை நிறுத்தாதுவிடின் - பரீட்சைச் செயற்பாடுகளைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளுக்கு செல்ல வேண்டியேற்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment