Saturday, July 21, 2018

ஜுலை 26ம் திகதியன்று சுகயீன லீவு போராட்டம்: அதிபர், ஆசிரியர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு!


கல்விச் சேவைக்கு அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து 2018 ஜுலை 26ம் திகதியன்று  அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் - சுகயீன லீவை அறிவித்து - வேலை நிறுத்தம்; செய்து – கல்வியில் அரசியல் தலையீட்டை ஒழித்து – தரமான கல்வியை உறுதிப்படுத்த பொறுப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டுமென்று இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

அரசியல் பழிவாங்கப்பட்டுள்ளதாக கூறி - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி கல்வி நிர்வாக சேவைக்கும், ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கும் அதிபர் சேவைக்கும், 1014 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எமது முதலாவது செயற்பாடு, 2018 ஜுலை 04ம் திகதி அன்று, சுகயீன விடுகை எடுத்து பணி நிறுத்தத்தை மேற் கொண்டு இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

இத்தருணத்தில் - நாம் இந்த நியமனத்தை இரத்துச் செய்ய கல்வியமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியிருந்தோம். இது வரை எவ்வித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இச்செயற்பாட்டிற்குப் பின்பு சகல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் 2018.07.10 அன்று பொதுச் சேவை ஆணைக்குழுவிற்குச் சென்று உரிய தகவல்களை தெரிவித்ததன்பின், இந்நியமனத்தைப் பெறவுள்ள நபர்களின் சுயவிபரக் கோவையை பரிசீலிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி,
இந்நியமனங்களைப் பெறவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் வெளிவந்தது, அதில் - அடிப்படைத் தகைமையே இல்லாத, க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாத – அதிபர் சேவை,
நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாத – போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்காத – பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான – ஒழுக்காற்று நடவடிக்கைகளின்போது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்ற – நபர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் - அதிபர்கள் கல்வித்துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது நாளுக்கு நாள் பின்னடைந்து வரும் வேளையில், அதாவது - சம்பளம், பதவியுயர்வுகள், சம்பள நிலுவை, வழங்குவது உட்பட தொழிற்பிரச்சினைகள் எனப் பரவிச் செல்லும் நிலையில் - நாம் முதலாவதாக செய்ய வேண்டியது, கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதில் இருந்து விடுவித்துக் கொள்வதாகும். இந்த வகையில் - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி நியமனம் வழங்குவதன் மூலம் எதிர் காலத்தில் இச்சேவைகளுக்கு உள்வாங்க எதிர்பார்த்திருக்கும் ஆசிரிய அதிபர்களுக்கு பாரிய அநீதி ஏற்படுவதோடு இது முழுக்கல்வியையும் பாரிய சரிவுக்கு இட்டுச் செல்லும் செயலாகும்.
அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் நியமனம் வழங்குவதை நிறுத்துவதற்காக நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை முன்னெடுக்க 2018 ஜுலை 26ம் திகதி சுகயீன விடுகை எடுத்து பணியைப் புறக்கணித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து கல்வி சார் ஊழியர்களையும் அழைக்கின்றோம்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின்போது ஊழியர்கள் சார்பாக எழக்கூடிய அனைத்து பிரச்சினைகள் சவால்களையும் - எதிர்கொள்ள  சகல பொறுப்புக்களையும் கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினருடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் பொறுப்பேற்கும். சகலரும் கல்வி நிர்வாக சேவை, ஆசிரிய கல்வியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, அதிகாரிகள்
அனைவரும் அச்சமின்றி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய - கல்வியை அரசியல் மயப்படுத்துவதில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக பொதுச் செயற்பாடொன்றில் இணைந்துள்ளோம். இதில் பெற்றோரகளின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம். எதிர்காலத்தில் எங்கள் சந்ததியின் கல்வியினை தரமானதாக பேணவேண்டுமாயின் இப்போராட்டத்திற்கு பெற்றோர்களும், கல்விச் சமூகமும்  இணைந்து போராட வேண்டும். இதனால் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளிலும் பரீட்சை நடவடிக்கைகளிலும் தடை ஏற்படுத்துவதன் மூலம் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். இது இப்போராட்டத்தினால் ஏற்படும் விளைவாகும்.
இப்போராட்டம் கல்வித்துறையைப் பாதுகாப்பதற்கும் - எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கானதுமானதுமாகும்.
அந்நிலைமையைத் தடுத்துக் கொள்வதற்காகவும் கல்வித்துறையை அரசியலில் இருந்து விடுவித்துக்
கொள்வதற்காகவும் கல்வித்துறையின் நலனுக்காகவும் வடமாகாணத்திலும் நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம்.



No comments:

Post a Comment