Friday, October 12, 2018

இன்று வலிகாமம் கல்வி வலயத்தில் கூடிய சட்டவிரோத இடமாற்றச்சபை: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு!


இன்று வலிகாமம் கல்வி வலயத்தில் - தொலைபேசி அழைப்பு ஒன்றினூடாக - இடமாற்றச் சபை நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இடமாற்றச்சபை உறுப்பினர் அழைக்கப்பட்ட நிலையில் - அங்கு – தாபன விதிக்கோவையிலும் - இடமாற்றகொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி - அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்லாமல் - இடமாற்றச் சபை கூடப்பட்ட நிலையில் - அந்த இடமாற்றச்சபை சட்டவிரோதமானது என்பதன் அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு செய்துள்ளது.
ஏற்கனவே - கூடப்பட்ட இடமாற்ற சபைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் -இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.  இத்தகைய விடயங்களை ஆராய்ந்து – அதற்குரிய தீர்மானங்களின் பின்னரே புதிய இடமாற்ற நடைமுறைகளை அமுல்படுத்த ஆதரவு வழங்குவது என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருந்தது. 

இந்நிலையில் -  வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் – தாபனவிதிக்கோவைகளிலும், இடமாற்றக் கொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள சட்டபூர்வமான இடமாற்றச்சபை உறுப்பினர்களுக்கு மேலதிகமாக – தனக்கு ஆதரவானவர்களை திரட்டி – முறைகேடாக இடமாற்றங்கள் மேற்கொள்ளவிருந்த நிலையில் - இந்த சட்டவிரோத இடமாற்றச்சபையிலிருந்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்புச் செய்துள்ளது. 

உரிய முறையில் - இடமாற்றச்சபை உறுப்பினர்களுக்கு அறிவிப்புக்கள் வழங்காமலும், சட்டபூர்வமான அங்கீகாரமுடைய தொழிற்சங்கத்தின் உறுப்பினரை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கிலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான இடமாற்றச்சபைகள் செல்லுபடியற்றதாகும். 

 முறையற்ற இடமாற்றம் தொடர்பாக - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ( HRC/JA/069/2018) வழங்கிய பரிந்துரையில் -
"ஆசிரிய இடமாற்ற செயர்பாடுகள் யாவும் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதையும் - இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் இடமாற்ற சபையின் தீர்மானமாக அமைவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வழங்கவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் - 

இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைவாக - உரியமுறையில் - அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இடமாற்றச்சபை கூடாமல் - வலிகாமம் கல்வி வலயத்தில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் - இந்த இடமாற்றங்கள் தொடர்பாக சட்டரீதியாக இலங்கை ஆசிரியர் சங்கம் சவால்களுக்கு உட்படுத்தும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரித்தார்.

No comments:

Post a Comment