Thursday, October 11, 2018

வடக்கு கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் வழங்கப்பட்ட முறைகேடான இடமாற்றத்தை உடன் சீர்படுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை!



தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தின் போது 2017 ஆம் ஆண்டு இடமாற்றச்சபையின் மூலம் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டன.

ஆயினும் - ஆசிரியர் ஒருவர் இவ் இடமாற்ற நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கவில்லை. இந்த முறையற்ற செயற்பாடுகளுக்கு வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் - வடமாகாண கல்விப் பணிப்பாளரும் இடமாற்ற நடைமுறைகளுக்கு மாறாக செயற்பட்டிருந்தனர்.

வடமாகாணத்தில்  எந்தவொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டிருக்காத முறையில் - குறித்த ஆசிரியைக்கு சார்பாக – பல பாடசாலைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.  முன்னர் தொடர்ச்சியாகப் பணியாற்றிய யாழ்.வலயத்திலுள்ள குறித்த அந்தப் பாடசாலையிலேயே தன்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இவ்வாறு வழங்கப்படும் இடமாற்றம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னைய வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனுக்கு தெரியப்படுத்தியமைக்கமைவாக - மீண்டும் பழைய பாடசாலைக்கு வழங்கப்படவிருந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் - வடக்கு கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் இடமாற்றம் பெற்று சென்ற பின்னர் – வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அ.அனந்தராஜால் - யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருக்கு – மீண்டும் பழைய பாடசாலையையே ஆசிரியைக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆயினும்-  யாழ்.வலயக் கல்விப் பணிமனையால் கடிதம் வழங்கப்பட்டிராத நிலையில்- வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடிதத்துடன் சென்று – பழைய பாடசாலையிலேயே குறித்த ஆசிரியை கடமையை ஆற்றிவருகின்றார்.

இம் முறையற்ற விடயம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சர்- வடமாகாண முதலமைச்சர் -  வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியிருந்தும். இவ்விடயம் சீர்செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் - இம்முறைகேடான இடமாற்றம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை விசாரணை செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - இவ்விடமாற்றத்தில் வடமாகாண கல்விப் பணிப்பாளரின் தலையீடு இருந்துள்ளது எனவும் - விசாரணையின் போது - இத்தலையீடு தொடர்பில் விளக்கம் எவையும் தராமல் - இவ்விடமாற்றம் ''யாழ்.வலயத்துக்குட்பட்டதால்  யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விளக்கங்களை பெற முடியும்'' எனக் குறிப்பிட்டமை தொடர்பிலும் கண்டித்துள்ளது.

குறித்த பாடசாலை அதிபரும் நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் - வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடிதம் மூலம் செயற்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும்- 

இதனை யாழ்.பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏற்று அங்கீகரித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்-

இடமாற்ற சபை கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆசிரியரது இடமாற்ற விடயத்தில் குறித்த பாடசாலை அதிபர் - யாழ்.வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக செயற்பட்டமையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானிக்கின்றது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் -
 குறித்த ஆசிரியைக்கு வேறு பாடசாலைக்கு உடனடியாக இடமாற்றத்தை வழங்க வேண்டும் எனவும் -

ஆசிரிய இடமாற்ற செயர்பாடுகள் யாவும் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதையும் - இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் இடமாற்ற சபையின் தீர்மானமாக அமைவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வழங்கவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

No comments:

Post a Comment