Sunday, October 7, 2018

பல லட்சங்கள் லஞ்சமாகப் பெற்ற கொழும்பு இந்து மகளிர் கல்லூரி அதிபர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு.


பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கென பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட கொழும்பு இந்து மகளிர் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் கோதை நகுலராஜா அவர்களுக்கெதிராக இலங்கை ஆசிரியர் சங்கமும், அப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து 04.10.2018 அன்று கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குறிப்பிடுகையில் -

எமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எண்பது பேரிடமிருந்து ஐம்பத்தேழு இலட்சம் ரூபா பெற்றுள்ளார். ஆனாலும் அந்த ஐம்பத்தேழு இலட்சம் ரூபா எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது தொடர்பாக – எவ்வித கணக்கும் காட்டப்படவில்லை. இது தொடர்பாக கல்வியமைச்சுக்கு எம்மால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் கடந்த மாதம் 3ஆம் திகதி இந்தப் பாடசாலை கணக்கு பேணப்படும் மிலாகிரிய இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று இருபத்து மூன்று லட்சம் ரூபாவை அதிபர்  வைப்பில் இட்டுள்ளார். இந்த இருபத்து மூன்று லட்சம் ரூபா கட்டிய பற்றுச்சீட்டும் எம்மிடம் ஆதாரமாக உள்ளது. இது 2017 ஆம் ஆண்டு மாணவர் அனுமதிக்காக பெற்றுக்கொண்டது மட்டுமாகும். ஆனால் - ஏனைய காலப்பகுதிகளில் இவ் அதிபர் பெற்றுக்கொண்ட பணம் தொடர்பாக – எவ்விதமான விசாரணைகளும் நடைபெறவில்லை. இவை விசாரிக்கப்படவேண்டும்.

தற்போது - இப்பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி நிதியை கல்வியமைச்சு இடைநிறுத்தியுள்ளது. பாடசாலையின் வாகனத்தைப் பாவிப்பதற்காக – கல்வியமைச்சால் சாரதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் - மேலதிகமாக சாரதியொருவரை முப்பத்தையாயிரம் ரூபாவுக்கு நியமித்திருந்தார். ஆனால் - ஓட்டுநர் அட்டவணை பட்டியல் எதுவும் பேணப்படவில்லை.

பாடசாலையில் கேபிள்ரீவி, குளிரூட்டி போன்ற ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். இவையாவும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திலேயே நடைபெற்றுள்ளது. இவையாவும் முறையற்ற செயற்பாடுகளாகும்.
இவை தொடர்பாக – மத்திய கல்வியமைச்சுக்கு முறைப்பாடு செய்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆதலால் - இவர் அதிபராக வந்த காலத்திலிருந்து இதுவரைக்குமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளோம்.

இந்தப் பாடசாலையுடன்; கோயில் ஒன்றுள்ளது. இக்கோயிலில் ஒரே செயற்பாட்டுக்கு பலரிடம் பொய்கூறிப் பணம்பெற்றுள்ளார். 
தற்போது அந்த அதிபர் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் - பாடசாலையின் விடுதியிலேயே இன்னும் தங்கியிருக்கிறார். இங்கிருந்துகொண்டு இரவிரவாக –பாடசாலையின் கோவைகளை எடுத்து செல்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே - இந்த அதிபர் உடனடியாக பாடசாலைவிடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டும்.
அத்துடன் -   இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்ட இந்த அதிபரைப் பாதுகாப்பதற்காக – தமிழ் அரசியல் வாதிகளிகள் முயன்று வருகின்றனர். இந்தத் தமிழ் அரசியல் வாதிகளின் இந்தச் செயற்பாடு வெட்கக்கேடானதாகும்.
இந்த நேரத்தில் இத்தகைய தமிழ் அரசியல்வாதிகளிடம்  சரியான இடத்தில் நீங்கள் நில்லுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தமது அரசியல் லாபங்களுக்காக இந்தக் களவுகள் செய்த அதிபரைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முயலக்கூடாது என்தையும் கூறிக்கொள்கின்றோம். இத்தகைய அரசியல் வாதிகள் பெற்றோர், மாணவர்கள், கல்வி சமூகத்தின் நிலைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஊழல்வாதிகளைக் காப்பாற்ற முயலக்கூடாது என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.  இவ்விடயம் சம்பந்தமாக முறையான விசாரணையொன்று வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment