Monday, January 23, 2017

முதலமைச்சரின் கோரிக்கையையடுத்து கவனயீர்ப்பு இடைநிறுத்தம்.


இன்று 23.01.2017அன்று வெளிமாவட்டத்தில் பணியாற்றி இடமாற்றம் கோரியிருந்த ஆசிரியர்களுக்கு - பொய்க் குற்றங்கள் சுமத்தி வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத பணித்தடையை நீக்கக் கோரி குறுகிய கால அழைப்பில் கவனயீர்ப்பு நிகழ்வினை வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பு இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தியிருந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்பின்னர் – வடமாகாண முதலமைச்சருடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டனர். முதலமைச்சரிடம் வடமாகாண கல்வி திணைக்களத்தின் பக்கச்சார்ப்பான இடமாற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் - ஆசிரியர்கள் இடமாற்றக் கோரிக்கையை முன்னிறுத்தி 10.01.2017 அன்று தாம் பாதிக்கப்பட்டதாகக் கருதி இடமாற்றம் கோரிய காரணங்களையும் - அதிகாரிகளின் பொறுப்புக்கூறாத தன்மைகளையும் - ஆசிரியர்களின் நீதிக்கான குரலை நசுக்குவதற்கான செயற்பாடாகவே – பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட பணித்தடை உத்தரவு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் - ஒரு தரப்பின் கருத்துக்களையே தாம் இப்போது விளங்கிக் கொண்டுள்ளதாகவும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் கருத்தையும் கேட்டே முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் - எதிர்வரும் திங்கட்கிழமை வரவுள்ளதாகவும் - அதன்பின் தான் முடிவெடுக்க ஒருவாரம் வழங்குமாறும் வடமாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க - இப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் - இம் மூன்று ஆசிரியர்களினதும் ஜனநாயக விரோத பணிநீக்கம் நீக்கப்படாதுவிட்டால் - சகல தரப்பினருடனும் ஆதரவு பெற்று - மீண்டும் பாரிய அளவில் தொழிற்சங்க நடவடிக்கை நீதிகிடைக்கும் வரை மேற்கொள்ளப்படும் எனவும் - அனைத்து ஆசிரியர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment