Friday, January 13, 2017

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட பணித்தடை உடடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும். இல்லையேல் பாரிய போராட்டமாக முன்னெடுக்கப்படும்.


கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டத்தில் தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாக தமது சொந்தவலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி – செயலாளர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் மறியலினை மீறி கல்வியமைச்சின் செயலாளரின் வாகனம் செல்ல முற்பட்டவேளை – ஆசிரியர்கள் சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் - செயலாளர் – பூட்டப்பட்டிருந்த முன்கதவை ஏறிப் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார். இதனையறிந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சம்பவஇடத்துக்குச் சென்றபோது – அப்போது காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் - காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை – கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டதாக பின்னர் அறிந்தோம். ஆனால்- தாம் காயமடைந்த நிலையில்-  செயலாளர் தன்னைப்பாதுகாப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் - சில ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு சில வலயக் கல்விப் பணிமனைக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊழியர்கள் தாம் பாதிக்கப்படும் போது – தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக ரீதியான உரிமையாகும். இது தொடர்பாக – வடமாகாண கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அதற்கு – தாபன விதிக்கோவையில் அதிகாரிகளை மதிக்காமைக்கு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். ஆயினும் நாம் - தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பு எனவும் - அதில் ஜனநாயக நாட்டில் பேசும் சுதந்ததிரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் - இது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்திருக்கின்றோம்.

இவ்வாசிரியர்களுக்கு – வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவு ஜனநாயக உரிமையை நசுக்கும் செயற்பாடாகும். எனவே பணித்தடை உத்தரவு உடனடியாக இரத்துச் செயப்பட்டு இலங்கை அரசியல் யாப்புக்கமைய அடிப்படை உரிமை நிலைநாட்டப்படவேண்டும்.  இல்லையேல் - ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் - அடிப்படை மனித சுதந்திரத்தை நிலைநாட்டும் போராட்டமாக – அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டமாக கொண்டுசெல்வோம் என்பதை எச்சரிக்;கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment