Thursday, January 26, 2017

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு. ஜனநாயக ரீதியான போராட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும்.



வவுனியாவில் நான்காவது நாளாக - பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மையைக் கண்டிறியவும், அவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை தெரிவிக்கின்றது.  காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கரிசனை கொள்வதாகவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் கூறி – தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு தனது இனவாதமுகத்தையே காட்டி நிற்கின்றது. இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் கடந்தகால அரசாங்கங்களே இருந்துள்ளன. நல்லாட்சி எனக் கூறி ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழர்களுக்கான தீர்வில் அக்கறையற்ற இனவாத செயற்பாடுகளையே இன்றைய அரசம் அரங்கேற்றிவருகின்றது. கடந்தகால அரசு இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டிநின்றது. ஆனால் - இன்று நல்லாட்சி எனக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய அரசு ஒரு புறம் நல்லிணக்க முகத்தைக் காட்டுவது போன்று தமிழர்களுக்கு நடித்து - இனவாத சக்திகளுடனேயே செயற்பட்டு வருகின்றது.
காணாமற்போன தமது உறவுகள் தொடர்பாக – நல்லாட்சி அரசாங்கத்தாலும் ஏமாற்றப்பட்ட நிலையில் - உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு அவர்களின் உறவுகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே – பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதோடு – அவர்களின் உறவுகள் நீதியைப்பெறுவதற்கு சகல மட்டங்களிலும் - ஜனநாயக ரீதியான போராட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். இதற்கு – சகல ஒத்துழைப்புக்களையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கத்தயாராக உள்ளது.

No comments:

Post a Comment