Wednesday, February 22, 2017

கேப்பாப்புலவிற்கு ஆதரவாக கொழும்பில் நடந்தது ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 20 நாட்களைக் கடந்தும் தீர்வின்றி உள்ள நிலையில் - இன்று 22.02.2017 கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக காலை 11.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தென்னிலங்கை மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களான – சிவசக்தி ஆனந்தன், விக்கிரபாகு கருணாரட்ண, சிறிதுங்க ஜெணசூரிய, குமரகுருபரன், அசாத்சாலி, செந்திதவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொண்டுவரும் நியாயமான போராட்டத்துக்கு நல்லாட்சி அரசு விரைவில் தீர்வு வழங்கவேண்டும்.

2012 ஆம் ஆண்டு கேப்பாப்பிலவு மக்கள் மெனிக்பாம் முகாமிலிருந்த போது – கேப்பாப்பிலவிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியிருந்தனர். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மக்களை அழைத்து காணிவிடுவிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறி ஏமாற்றியுள்ளனர். போர்முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் - இராணுவ முகாம்கள் என்னும் போர்வையில் மக்களின் காணிகளை அபகரித்து வைக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விட்டு இராணுவம் வெளியேறவேண்டும். தமது காணிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாட நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்பவர்கள் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஒருமுகத்தையும் - தமது நாட்டு மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிடவேண்டும். நேர்மையாக மக்களை வழிநடத்தவேண்டும். வடபகுதி மக்களின் காணிமீட்புப் போராட்டம் வெற்றிபெற தென்னிலங்கைசக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டத்துக்கு  வலுச்சேர்ப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment