Wednesday, April 19, 2017

கைரேகை இயந்திர நடைமுறையூடாக - வடமாகாண கல்வியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு வடமாகாண கல்வியமைச்சே முழுமையான பொறுப்பையும் ஏற்கவேண்டும்


வடமாகாணத்தில் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பத்திலிருந்து ஆசிரியர்களின் வரவைப் பதிவிடுவதற்கு – கை ரேகை பதிவு செய்யும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவேண்டும் எனவும் - அதனை பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நிதியைக் கொண்டு அல்லது மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் தரஉள்ளீட்டு நிதியைக் கொண்டு கொள்வனவு செய்யுமாறும் வடமாகாணக் கல்வியமைச்சு அதிபர்களைப் பணித்துள்ளது. பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய பணத்தினைக் கொண்டு அல்லது மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் தரஉள்ளீட்டு நிதியைக் கொண்டு கைரேகை இயந்திரம் கொள்வனவு செய்வது தவறான நடைமுறையாகும். இதனை நாம் மத்திய கல்வியமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.

இத்திட்டம் ஆசிரியத்தொழிலுக்கு அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சு மீள்பரிசீலனை செய்யவேண்டும். ஆசிரியத்தொழில் என்பது – மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திக்காது – ஆசிரியர்களை நிர்வாக நடமுறைகளுக்குள் முடக்குவதற்கு மட்டுமே இத்திட்டம் பயன்படக்கூடியதாக அமையவுள்ளது.

தற்போதைய விடுமுறைக் காலங்களிலும் கூட – பாடசாலைகளுக்குச்சென்று பல ஆசிரியர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் மேலதிக வகுப்புக்களையும், எதிர்வரும் தவணைகளில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழா போட்டிகளுக்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் - தாம் வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாரநாட்களிலும் மேலதிக வகுப்புக்களை தமது விருப்பின் அடிப்படையில் எடுத்துவந்தனர். அத்துடன் - க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் மேலதிக வகுப்புக்களும் - பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் பாடசாலை தவிர்ந்த நேரங்களிலேயே நடைபெறுகின்றன.

ஆசிரியர்களின் சேவையின் தன்மையை கருத்திலெடுக்காது – வெறுமனே நிர்வாக இயந்திரத்தைத் திணிப்பதன் மூலம் - ஆசிரியர்கள்  வெறுமனே ஆறு மணி நேரத்துக்;கு மட்டும் பணியாற்றினால் போதும் என்று வடமாகாண கல்வியமைச்சு கருதுகின்றதா?

வடமாகாண கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் - பாடசாலை ஆசிரியர்களின் மட்டில் பாரிய அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் - வடமாகாணக் கல்வியமைச்சு  நிர்வாக விடயத்தில் தேவையற்ற இறுக்கங்களை திணிக்குமாயின் – ஆசிரியர்களை மேலதிகமாக பணியாற்றுமாறு வற்புறுத்த முடியாது. அவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும். இல்லையேல் ஆசிரியர்கள் மாற்றுமுடிவொன்றை எடுக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர்.

இதனால் - வடமாகாண கல்வியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு – வடமாகாண கல்வியமைச்சே முழுமையான பொறுப்பையும் ஏற்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.


No comments:

Post a Comment