Friday, May 8, 2020

மே மாதச் சம்பளத்தை வழங்க முடியாது. அழுத்தங்களுக்கு அடிபணியத்தேவையில்லை! - ஜோசப் ஸ்ராலின் -

கோவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து- இலங்கை அரசு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிப்பதற்கு எனக் கூறி - குறைந்த ஊதியங்கள் பெறும் அரச ஊழியர்களிடம் அவர்களின் மே மாதச் சம்பளத்தை அரசாங்கம் கேட்பது முறையற்றது என்று - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.; 
இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் - 
கடன்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகள் போன்ற - கடுமையான நிதிச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களின் ஏப்ரல் மற்றும் மே மாதக் கடன் தவணைகளை செலுத்த வேண்டாம் என்ற முடிவு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தம் கூட - அந்த சலுகை - ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பாக - ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட பல அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பண்டிகைக் கால முற்பணங்களும் பலருக்குக் கிடைக்கவில்லை. அதிகமான வெளிநாட்டு உதவிகள் தற்போது அரசுக்கு கிடைப்பதுடன் - கச்சாய் எண்ணையின் விலை குறைவாகக் கிடைக்கும் தற்போதைய நிலையிலும் கூட இந்த அரசு எரிபொருள் விலைகளைக் குறைக்காமல் – அதிக விலைக்கே விற்றுவருகின்றது. 
இதுபோன்ற நிலையில் - ஜனாதிபதியின் செயலாளரின், அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தைக் கோரும்   கோரிக்கை நியாயமற்றதாகும். இதற்கு எவரும் அடிபணியத் தேவையில்லை. 
ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தரா - 2020 மே 5 திகதியிட்ட ஒரு கடிதத்தின் மூலம், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களும் - தங்கள் சம்பளத்தை அரசாங்க செலவினங்களுக்காக - நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதமானது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ளது. அதில் “நான் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கிறேன். நீங்களும் உங்கள் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த ஊக்குவிப்புக்கள் - அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவதிலேயே எப்படி அமைந்திருந்தது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் நன்கு அறிவோம். பலர் - அதிகாரிகளின் அழுத்தங்களுக்குப் பயந்து தமது சம்பளத்தை வழங்கும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. இது அரச ஊழியர்களை பாதிப்படையச் செய்யும் அநீதியான செயற்பாடாகும். அதுமட்டுமல்லாமல் - இதற்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை – தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு முறைகேடாகவும் - ஜனாதிபதியின் செயலாளர் பயன்படுத்தியுள்ளார்.
கோவிட் 19 நோய்த்தொற்றைக் காரணமாக காட்டி - அனைத்து அரசு ஊழியர்களின் மே சம்பளத்தை நன்கொடையாகக் கோரிநிற்கும் - அரசின் இத்தகைய முறையற்ற கோரிக்கையானது - ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் போராட்டம் - தபால், ரயில்வே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிற பொது சேவைகளின் சம்பள போராட்டங்கள் - எதிர்காலங்களில் தோன்றுவதைத் தடுப்பதற்கான அரசின் தந்திரோபாயமா? என்பதே நமக்கு முன்னுள்ள கேள்வியாகும். 
அரச ஊழியர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கான ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையானது - கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அதிபர், ஆசிரியர்-களின் சம்பள உயர்வு போராட்டத்தைக் கூடப் பாதித்துள்ளது. 
வெளிநாட்டு உதவிகள் தாராளமாகப் பெறப்பட்டு – எரிபொருள் மூலமும் இலாபமீட்டிக்கொண்டு - அரச ஊழியர்களின் சம்பளத்தை - அரசு கோரிநிற்பதானது – “நிதி நெருக்கடி” என்று பாசாங்கு செய்வதான அரசாங்கத்தின் முயற்சி என்றே எமக்கு வலுவான சந்தேகம் எழுகின்றது. அதுமட்டுமல்லாமல் - தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் - இ;வ்வாறு பெறப்படும் நிதிகள் - தனிப்பட்ட நபர்களின் பைகளை நிரப்பும் அபாயகரமான சூழலும் உள்ளது.
உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் - ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தை நியாயப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்திருக்கிறாh.; இதனை அரச ஊழியர்களின் அன்பளிப்பு எனவும் கூறியிருக்கிறார். இதே உயர்கல்வி அமைச்சர் தான் - ஒரு குடும்பம் வாழ்வதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா (2500/-) போதுமானது எனவும் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்தவராவார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.  
இவர்களின் - இந்தக்கோரிக்கை மிகவும் அநீதியானது என்பதுடன் - இதன்மூலம் அரச நிறுவனங்களின் தலைவர்கள் - ஊழியர்களின் ஊதியங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஜனாதிபதியின் செயலாளரும் அத்தகைய அழுத்தங்களை மறைமுகமாக ஊக்குவித்துள்ளார் என்பதையும் நாம் அறிவோம். இதனை இலங்கை அசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இத்தகைய அழுத்தங்களுக்கு – அதிபர், ஆசிரியர்கள் அடிபணியத்தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 
என்று ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment