Saturday, May 16, 2020

கல்வியமைச்சின் அனுமதியின்றி – கிழக்கில் பாடசாலைகள் நடாத்தமுடியாது: கல்வியமைச்சர் – ஜோசப் ஸ்ராலினிடம் தெரிவிப்பு!


சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக - சுகாதார சேவைகள் பணிமனையின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமல் - கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக -கிழக்கு மாகாண பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களை மே 18 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலைகள் உரியமுறையில் தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும்.  முகக் கவசங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் கடைப்பிடிப்பதற்குரிய ஏற்பாடுகளுக்கான நிதி விடயங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்குரிய  பொறிமுறைகளை கல்வியமைச்சு உருவாக்க வேண்டும்.  இவ்வாறாக - சுகாராப் பிரிவினரின் அனுமதியும் பெறப்படவேண்டும்.

இவை தொடர்பாக  கரிசனைகொள்ளாமல் - கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எடுக்கும் முயற்சிகளானது – மாணவர்களுக்கு நோய்த் தொற்றை அதிகரிக்கச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கம் -  கிழக்கு மாகாண ஆளுநருக்கும் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆயினும் - சில தேசிய பாடசாலைகளிலும் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயங்கள் தொடர்பாக – கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமாளுடனும் - தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளருடனும்- இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தனித்தனியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.

இதன்போது - சுகாரதர சேவைகள் அமைச்சின் பரிந்துரையின்றி – எந்தப் பாடசாலைகளும் ஆரம்பிக்க முடியாது எனக் கல்வியமைச்சர் குறிப்பிட்டதுடன்–  இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை – தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கிட்சிறி லியனகம அவர்களும் - கல்வியமைச்சின் அனுமதியின்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தவறான விடயம் எனவும்-  உடனடியாக கவனத்துக்கு எடுத்து செயற்படுவதாகவும் - தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

1 comment:

  1. கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக மிக நேர்த்தியான திட்டமிட்ட அணுகுமுறையே முன்னெடுக்கப்படுகின்றது. பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் நடவடிக்கை நான்கு கட்டங்களில் முன்னெடுக்கப்படுகின்றதையே நாம் அறிவோம். கிழக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மிகவும் நுணுக்கமாக கருத்துக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர் என்பதையே நாம் அறிவோம். கல்வி அமைச்சின் திட்டமிடலுக்கு அப்பால் கிழக்கு மாகாணக் கல்வித்துறை செயற்படவில்லை. கிழக்கு மாகாணத்தின் அதி கஸ்டப் பிரதேச கல்வி வலயத்தில் நீண்டகால சேவை அனுபவம் கொண்ட ஒரு ஆசிரியன் என்றவகையில் உண்மையை உரத்து உரைக்கும் கடமை எனக்கு உண்டு.... தயவு செய்து உறுதிப்படுத்தப்பட்ட உண்மையான தகவல்களை வழங்குதல் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete