Friday, May 1, 2020

இ.ஆ.சங்கம் ,யாழ். ப.ஊ.சங்கத்தினரின் மே தினச் செய்திகள் - 2020


இலங்கை ஆசிரியர் சங்கமும் அதன் தோழமைச்சக்திகளான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புதிய அதிபர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல காலமாக சர்வதேச தொழிலாளர் தினத்தை தொடர்ச்சியாக கொண்டாடிவந்துள்ளது.

கோவிட் 19 உலக நோய்த் தொற்று  இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின்  வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில் , தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளான  இலங்கை ஆசிரியர் சங்கம்,  புதிய அதிபர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் போன்றவர்களினதும் - வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

மே தினச்செய்தி - 2020
இலங்கை ஆசிரியர் சங்கம்

அன்பான தோழர்களே!

''தொழிலாளர்களாக ஒன்றுபடுவோம் '' என்னும் தொனிப்பொருளில் வழமையாக சர்வதேச மே தினத்தில் ஒன்றிணையும் தொழிலாளர்களாகிய நாம் - கொவிட்-19 நோய்த்தொற்றின் உலகளாவிய நெருக்கடியின் மூலம் ஒன்றுபடமுடியாத சூழலில் உள்ளோம்.

இலங்கையின் - இன்றைய இந்தச் சூழல்  - இலவசக் கல்வியையும் இலவச சகாதாரத்துறையையும் - தொழிற்சங்கங்கள் பாதுகாத்ததன் விளைவை - அனுபவரீதியாக அனைவரையும் உணரவைத்துள்ளது.

உலக வரைபடத்தில் - வெற்றியடைந்ததாகக் கருதிய - முதலாளித்துவ வல்லரசு நாடுகள் - சுகாதாரத்துறையையும், கல்வித்துறையையும் தனியார் மயமாக்கியதன் விளைவால் - மீளச்சிரமப்படும் பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதை நாம் அறிவோம்.

இலங்கை அரசு - 'சைட்டம்' முறைமை மூலம் - இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் - தனியார் மயப்படுத்தி நசுக்க முற்பட்டவேளை - அதனை எதிர்த்துப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் இணைந்து முன்கொண்டு சென்றதன் விளைவாலேயே -  இலவச சுகாதாரமும், இலவச கல்வியும் - இன்றும் மக்களைப் பாதுகாத்துவருகிறது. 

ஆயினும் - சுதந்திரமான கல்விக்கானதும் சுகாதாரத்துறைக்கானதுமான போராட்டம் இன்னும் முழுமைபெறவில்லை.

யுனஸ்கோவின் அறிக்கையிடலின் அடிப்படையில் - கொவிட் -19 பிரச்சினையால் உலகளவில் 1.7 பில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தரவுகள் 1.5 பில்லியன் வேலையிழப்புகள் உலகளவில் காணப்படுவதாக குறிப்பிடுகிறது.

இந்நிலையில் - இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது? என்று சிந்திக்கும் பொறுப்பு எம் அனைவர்மேலும் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயினும் - இலங்கை கல்வித்துறையில் - மே-11 பாடசாலை ஆரம்பிக்கும் என ஏப்ரல் -11 இலேயே தீர்மானித்திருந்தார்கள். ஏப்ரல் -11 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 197 ஆக மட்டுமே இருந்தது. மே-1 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 600 ஐ தாண்டியிருக்கிறது.

அவ்வாறாயின் - இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது என்று இன்றைய அரசு  பொறுப்புடன் செயற்படுகிறதா?

பாடசாலைப் பிள்ளைகளின் பாதுகாப்பைப் புறம்தள்ளி - வெறும் தேர்தலை நோக்காகக்கொண்டே இந்த அரசு செயற்படுகிறது. மக்களின் பாதுகாப்பைப் பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல்- 
கொரோனா கல்விப் பாதிப்பு தொடர்பாக - தற்போது உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் - தனியார் பாடசாலை உரிமையாளர் ஒருவர் உட்பட தனியார் பாடசாலைகளின் இரண்டு அதிபர்களுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். இது இலவசக் கல்வி தொடர்பாக இந்த அரசின் அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது. இதற்கு தொழிற்சங்கமாகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் - சிறு தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் எனப் பலதரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான ஒரு அவசரத்தீர்வும் அவசியமானதாகும்.

நோய்த்தொற்று என்பது - மனிதருக்கு தெரிந்தே வருவதில்லை. ஆனாலும் நோயாளிகளை உளவியல் ரீதியாக பாதிப்படையச்செய்யும் செயற்பாடுகள் உருவாகி வருவது தவிர்க்கப்படவேண்டும். கொரோனா நோய்த்தொற்றைக் காரணமாகக்கொண்டு - அடிப்படை வாதங்களையும் - இனவாதங்களையும் தூண்டும் அரசின் நோக்கம் தோற்கடிக்கப்படவேண்டும்.

எனவே - இக்கட்டான இந்த சூழலிலிருந்து - உலக தொழிலாளர்கள் மீண்டுவரவும் - இலங்கையில் - கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் இலவசமாக தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி - நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என - இன்றைய மே தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

மே தினச் செய்தி - 2020
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.

2020 மே தின அறைகூவல்: ஊழிக்கால பேரபாயம் - 
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எச்சரிக்கை. 


தோழர்களே!
கோவிட் 19 உலக நோய்த் தொற்று  இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின்  வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில் , தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளதும் வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

1. இந்த ஊரடங்கும் சுய தனிமைப்படுத்தலும் அவசியமானதெனினும் இது தொழிலாளிகளுக்கு இச் சூழ்நிலையில் மிக அவசியமான கருத்துப் பரிமாறலுக்கான மிகவும் முக்கியமான சாதனமாக இருந்த ஒன்று கூடலை இல்லாதாக்கியுள்ளது. தொழிலாளர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு இயலாததாகியுள்ளது.

2.வதந்திகளிடமிருந்து உண்மைகளை பிரித்தறிவதற்கோ, கண்டறிந்த உண்மைகளை வெளிக்கொணருவதற்கோ முடியாத நிலை  காணப்படுகிறது.

3.அமெரிக்காவிலும், ஆபிரிக்க நாடுகளிலும் மட்டுமன்றி இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் கூட நலிவுற்ற தரப்பினரும் நாளாந்த வேதனத் தொழிலாளர்களும் "பரிசோதனை எலிகளாக" தங்களையறியாமலே மாறும் அபாயத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

4. அரசாங்களின் தற்காலிக நிவாரணங்கள் உரிய மக்களுக்கு சென்றடைவதற்கு அரச அதிகாரிகள்,வங்கிகள் போன்ற அரச இயந்திரங்களே தடையாக உள்ளமையை இலங்கையில் காண்கிறோம்.

5.மேலும் குறுகிய அரசியல் நோக்குடையதாக  விமர்சிக்கப்படும் அரசாங்க கடன் சலுகை நிவாரணங்கள் நீண்ட காலத்தில் கடனாளிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்ற வாதம் இதுவரை மறுத்துரைக்கப்படவில்லை.

6.முறைசாரா தொழிலாளர்களதும் நிரந்தரமற்ற பணிகளில் நாளாந்த வேதனம் பெறுவோரினதும் வேலையிழக்கும் நிலைமைக்கு உடனடி நிவர்த்தியையோ அல்லது நிவாரணங்களையோ வழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்களுக்கு உள்ளது.அதிலிருந்து அவை விலகிவிடமுடியாது என்பதை தொழிற்சங்கங்கள் இடித்துரைக்கப்படவேண்டும்

7.ஆட்சியாளர்களும்,அதிகார தரப்பினரும் தமக்கு இயைந்த வகையில் தாம் தீர்மானித்த நேரத்தில்,தீர்மானித்த இடத்தில்,தீர்மானித்த தரப்பினருக்கு மட்டும்  தமது திட்டங்களை விளக்கி அங்கீகாரம் பெறுவதற்கு இன்றைய சூழல் இடமளிக்கிறது.

8.இன்றைய சூழலில் நோய்பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை/சமுகத்திற்கு ஏற்படக்கூடியஅபாயங்களை/ஊழல்களை சுட்டிக் காட்டும் மிகச் சிலரின் குரல்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

9.இன்றைய சூழலில் தவிர்க்க முடியாமல் உருவான மிகச்சில நல்ல விளைவுகளான சுய உற்பத்தி,கிராம  தன்னிறைவு விவசாயம், இயற்கை விவசாய முயற்சிகள் போன்றன நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிய பின்னான காலத்திலும் தொடர்ந்து நிலைபெற ஆகவேண்டியதைச் செய்யாவிட்டால் முதலாளித்துவ சக்திகளால் இவை திட்டமிட்டே அழிக்கப்படும்.

கடந்த காலங்களில் இந்திய படைகளின் போர்க் காலங்களிலும், 1995 மாபெரும் இடப்பெயர்விலும்,சுனாமி மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலங்களிலும்" படம்" காட்டியவர்களை நீங்கள் அறிவீர்கள். இப்போதும் அவ்வாறானவர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.

இதனால் தான் தோழர்களே , நாம் மிகவும் அவசியமாக, அவசரமாக கலந்துரையாட வேண்டியுள்ளது.

இந்த அவசர கலந்துரையாடலை நாம் செய்யத் தவறின்,இவ்விடர் காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிற்காலத்தில் பயன்படுத்த தவறியவர்களாவோம்

அதுமட்டுமின்றி பல்வேறு பிற்போக்கு சக்திகளும் சுயநலபேர்வழிகளும் இக் காலத்துக்கு பின்வரும் காலத்தை  பொதுநலனுக்காகவன்றி தமது சொந்த நலனுக்காக பயன்படுத்த போகும் கொடுமையை பார்த்தும் வாளாவிருப்பவர்களாவோம்.

ஆகவே தோழர்களே,சோர்விலிருந்து மீண்டெழுவோம்.ஒன்று சேருவோம்.இன்றே!இப்போதே!

No comments:

Post a Comment