Tuesday, May 12, 2020

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி சம்பளத்தொகை அறவிடமுடியாது! -ஜோசப் ஸ்ராலின் -


 கொவிட்-19 க்கான அரச நிவாரணத்துக்கான அறவீடாக - ஒரு நாள் சம்பளத்தை - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம்  தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் - கிழக்கு மாகாணத்திலும் - அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தினைப் பெறுவதற்கு – அதிகாரிகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு – அதிபர் ஆசிரியர்களின் அனுமதியின்றி கழிக்க முடியாது என்பதை -– கிழக்கு மாகாண ஆளுநருக்குக் கடிதம் மூலம் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை - கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு – அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பெறுவது தொடர்பாக - கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரினால் - கிழக்கு மாகாணத்தின் அனைத்து செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் கீழ் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் - அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் - "அனைத்து ஆசியர்களிடமும் அறவிடுவது குறித்து அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு" குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் மூலம் - அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி -அதிகாரிகளின் அழுத்தங்கள் மூலமாக – அடிபணிய வைக்கும் முயற்சிகளே நடைபெறுகின்றன.

எனவே – அதிபர், ஆசிரியர்களின் சம்மதிமின்றி – ஒரு நாள் சம்பளமோ, அல்லது ஒருமாத சம்பளங்களோ கழிப்பது தொடர்பான - அதிகாரிகளின் எவ்வித அழுத்தங்கள் ஏற்பட்டாலும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவருமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment