Saturday, June 18, 2016

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே வடமாகாணத்தில் அதிபர் பதவிகள் வழங்கப்படும் - உறுதியளித்தார் வடமாகாண முதலமைச்சர்

அதிபர் தரப் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்திய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு - தற்போது பதில் கடமையில் அதிபர்களாக உள்ளவர்களின் பாடசாலைகளை வழங்குவது என - முதலமைச்சருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான 15.06.2016 புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது முதலமைச்சர் உறுதியளித்தார்.

வடமாகாணத்தில் - கடமைநிறைவேற்று அதிபர்களால் இதுவரை நிர்வகித்து வரப்பட்ட பாடசாலைகளுக்கு அதிபர் தரப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களை நியமிக்காது – அவர்களை உப அதிபர்களாகவும் பிரதிஅதிபர்களாகவும் நியமித்து – கடமைநிறைவேற்று அதிபர்களை தொடர்ந்து அப்பாடசாலைகளிலேயே அதிபர்களாக அனுமதிக்கும் வகையில் வடமாகாண கல்வியமைச்சு செயற்பட்டு வந்த நிலையில் - அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்புக்கு மாறான இந்தச் செயற்பாட்டுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்புக்கு மாறாக -  எந்தவொரு அதிபர் நியமனமும் வழங்கபடக்கூடாது எனவும் - வடமாகாணத்தில் ஏற்பட்ட ஆளணி வெற்றிடத்துக்கமைவாகவே புதிய அதிபர்கள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சிவழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் - 26.05.2016 அன்று வடமாகாண சபை உறுப்பினர் திரு.அரியரட்ணம் பசுபதி அவர்களால் கடமைநிறைவேற்று அதிபர்களை பாதிக்காது - பாடசாலைகளை புதிய அதிபர்களுக்கு வழங்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக உள்ளக தகவல்கள் கசிந்த நிலையில் - வடமாகாண பாடசாலைகளின் அதிபர் தரத்தினைப் பெற்ற புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படவேண்டும் எனவும் - அதற்கான சட்டரீதியான ஆதாரங்களை முன்வைத்தும் - வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் விளக்கக் கடிதம் அனுப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக – 15.06.2016 அன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது – சங்கப் பிரதிநிதிகளால் - சட்டரீதியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு – வடமாகாண சபையில் வடமாகாண உறுப்பினர் திரு.அரியரட்ணம் பசுபதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தவறானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது - தன்னிடமுள்ள வடமாகாண அமர்வின் அறிக்கையின் அடிப்படையில் - அவ்விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டவில்லை எனவும் - வடமாகாண சபை உறுப்பினர் திரு. ரவிகரனால் அன்று இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்படவிருந்த நிலையில் - அதற்குள் இரண்டு நிமிடம் பேசுவதற்கு அனுமதி தருமாறு கோரியே - இவ்விடயத்தை உறுப்பினர் திரு.அரியரட்ணம் பசுபதி கோரிக்கையாக மட்டுமே விடுத்திருந்தார் எனவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் –அதிபர் தர போட்டிப்பரீட்சையில் தோற்றாத அல்லது சித்தியடையாத கடமைநிறைவேற்று அதிபர்களை அகற்றி - அதிபர் தரப் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கே பொருத்தமான பாடசாலைகள் வழங்குவது எனவும் - கடமைநிறைவேற்று அதிபர்களில் 50 வயதைத்தாண்டியவர்களுக்கு அதிபர் தர போட்டிப்பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் - அவர்களுக்கு மட்டும் - அவர்களது எஞ்சிய சேவை காலத்தில் ஏதாவதொரு பாடசாலையில் உபஅதிபராக கடமையாற்ற அனுமதிப்பது எனவும் தீர்மானம் எட்டப்பட்டது.

No comments:

Post a Comment