Thursday, June 9, 2016

இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்படுகின்றது வலிகாமம்: செப்டெம்பர் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டம்

யாழ்.மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மாணவர்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்ட மிகப் பெரிய கல்வி வலயமான, வலிகாமம் கல்வி வலயம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் இரண்டு கல்வி வலயங்களாகப் பிரிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத் தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய கல்வி வலயங்களுடன் ஒப்பிடுகையில், மிக அதிகளவான மாணவர்களையும் ஆசிரியர்களையம் கொண்ட வலயமாக வலிகாமம் கல்வி வலயம் காணப்படுகின்றது.
அதனால் வலிகாமம் கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது எனச் சில வருடங்களாக கல்விச் சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வலிகாமம் கல்வி வலயம் இப்போது இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள 4 கோட்டக் கல்வி அலுவலகங்களில், சங்கானை, சண்டிலிப்பாய் கல்விக் கோட்டங்களையும் தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட காரைநகர் கல்விக் கோட்டத்தையும் உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயம் உருவாக்கப்படவுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள உடுவில், தெல்லிப்பழைக் கோட்டங்களையும், யாழ். கல்வி வலயத்தின் கோப்பாய்க் கல்வி கோட்டத்தையும் உள்ளடக்கியதாக மற்றைய கல்வி வலயம் உருவாக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பகுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டில் விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆய்வுரை மேற்கொண்டிருந்த பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளையும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பகுப்பானது இந்தப் பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தியைத் துரிதமாக முன்னெடுக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும், நிர்வாகம் இலகுபடுத்தப்பட்டதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment