Saturday, June 4, 2016

வடமாகாணக் கல்வியை அழிக்கும் கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்


வடமாகாணக் கல்வியை அழிக்கும் கண்ணுக்குப் புலப்படாத யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்களே - தமது திட்டமிடப்படாத - தூரநோக்கற்ற சிந்தனையின் மூலமும், தமது அரசியல் எதிர்காலத்திற்காகவும், தமக்கு தெரிந்தவர்களை வாழவைப்பதற்கான இடமாகவும் வடமாகாண கல்வியமைச்சை மாற்றியுள்ளமையாகும். ஊழல்கள் புரையோடிப்போன - விமர்சனங்களுக்கும் சுரணையற்று இருக்கும் வடமாகாண கல்வியமைச்சு - கல்வியில் எதனை சாதிக்கத் துடிக்கிறது?
இவை ஒருபுறமிருக்க....
பாடவேளையோ 40 நிமிடம் - பதிவுகள் பல. இதனால் மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய விழுமியப்பண்புகள் இன்றைய கல்வியினூடு புகுத்தப்படுவதில்லை. புகுத்துவதற்கு ஆசிரியனுக்கு நேரமும் இல்லை என்பதே உண்மை. 
இந்தநிலையில் - மாணவர்களின் ஒழுக்கத்தில் பாடசாலைகளின் பங்கு பற்றிக் கதைப்பதற்கு வடமாகாண கல்வியமைச்சுக்கு எந்த அருகதையும் இல்லை.

வடமாகாண கல்வியமைச்சால் மட்டும் அவசியமற்றுத் திணிக்கப்பட்ட நீல மட்டை புத்தகப் பதிவும் இதில் உள்ளடக்கம். சென்ற வருடம் 2015 கல்வியமைச்சின் நிதி திரும்பப் போகிறது என்பதால் - அவசரமாக வடமாகாண சிந்தனை சிற்பிகளாக தம்மைத்தாமே கருதுபவர்களால் இத்திட்டம் ஆமோதிக்கப்பட்டது. இவர்களுள் பலர் வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள். இலங்கையின் கலைத்திட்டம் பற்றியே அறியாதவர்கள். போரின்பின் இங்குவந்து - தமது இறுதிக்காலத்தை இங்கே கழிக்க வந்தவர்கள். நிதிபலம் அவர்களிடம் உண்டு என்பதற்காக வடமாகாண கல்வி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீல மட்டை புத்தகத்தில் ஆசிரியர்கள் கற்பித்ததைப் பாடப்பதிவு புத்தகத்தில் உள்ளவாறு பதியவேண்டும். மேற்பார்வைக்கு வருபவர்கள், பாடப்பதிவு புத்தகத்தில் பதியப்பட்டது கற்பிக்கப்பட்டுள்ளதா எனப் பார்ப்பதற்கு தான் இத்திட்டமாம். இது கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படுமாம்.
பல நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வடமாகாண கல்வியமைச்சு - ஆசிரியர்களின் பதிவிற்கு கணக்காய்வு செய்வதென்பதுதான் வேடிக்கையான விடயம்.
''இளகின இரும்பைக் கண்டால் -கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பானாம்'' என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.



பாடப்பதிவில் உள்ளதை - நீலமட்டை புத்தகத்தில் பதிவதை கல்வியமைச்சு சட்டமாக எதிர்பார்த்தால் - சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஆசிரியனால் தன்னை வெறும் பதிவுகளினூடே பாதுகாத்துக்கொள்ள முடியும். 
ஆனால் -
இங்கே தான் கற்பித்தல் தொடர்பான முரண்பாடு ஏற்படுகிறது.

கற்பித்தல் என்பது ..
மாறுபடும் மாணவர்களின் திறன்களுக்கேற்ற கற்பித்தலாக அமைய வேண்டுமா?
அல்லது
பாடப்பதிவுக்கு ஏற்ற கற்பித்தலாக அமைய வேண்டுமா?

No comments:

Post a Comment