Thursday, June 9, 2016

அதிகாரிகளின் பொக்கட்டுக்களை நிரப்பிவரும் ஆசிரியர் மகாநாடு : ஆசிரியர்கள் விசனம்

வடமாகாண கல்வியமைச்சினால் பலநூறு மில்லியன்கள் வடமாகாணத்திலுள்ள 12 கல்விவலயங்களுக்குமாகப் பகிரப்பட்டு – வினைத்திறனற்ற முறையில் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக பல தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவைதவிர - இதுவரை ஆசிரியர் மகாநாடு நடைபெற்ற கல்வி வலயங்களில் - நடத்தப்பட்ட கண்காட்சிகளிற்காக ஆசிரியர்களால் செலவு செய்யப்பட்ட பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 வலிகாமம் கல்வி வலயத்துக்கு மட்டும் 4.3 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலும் - அங்கு தயாரிக்கப்பட்ட முகப்புவளைவுக்காக ஒரு லட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளதாகவும் - இது மிக அதிகமான தொகையெனவும் - இது முறையற்ற கணக்குவிபரம் எனவும் வலிகாமம் வலய ஆசிரியர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் - ஆசிரியர் மகாநாட்டில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு போதிய இருக்கை வசதிகள் வலிகாமம் வலயத்தில் செய்துகொடுக்கப்படவில்லை எனவும் - பலர் நின்ற நிலையிலேயே நிகழ்வுகளில் கலந்துகொண்டனர் எனவும் - பல ஆசிரியர்களுக்கு மதிய உணவு கிடைக்கவில்லை எனவும் - கிடைத்த உணவும் தரக்குறைவானதாகவே வழங்கப்பட்டதாகயவும் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்தனர் . இதேவேளை – பல வலயங்களில் ஆசிரியர் மகாநாட்டை சாட்டாக வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை வெள்ளிக்கிழமையும் - நாளை மறுதினமும் தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரியர் மகாநாடு நடைபெறவுள்ளது. ஆனால் - இரண்டு நாட்களுக்கு முன்னரே பாடசாலைகளுக்கு வரவுச் சான்றிதழை அனுப்பி - தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையினரால் ஆசிரியர்களிடம் கைகொப்பம் பெறப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் அதிகாரிகள் தங்கள் பொக்கட்டுக்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளும் முறைகேடான செயற்பாடுகள் என தென்மராட்சி வலய ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment