Monday, June 6, 2016

அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கும் வடமாகாணக் கல்வி




இலங்கை முழுவதும் உள்ள அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக போட்டிப்பரீட்சையினூடாக அதிபர் தரம் - 3 க்கு 4079 பேர் தெரிவுசெய்யப்பட்டு 3859 பேர்களுக்கு தற்போது பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. நாடுமுழுவதுமாக 4891 பாடசாலைகளுக்கு 3 ஆம் தரத்தையுடைய அதிபர்கள் தேவை எனக் கணிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் - வடமாகாண பாடசாலைகளிலும் அதிபர் தரம் 3 பயிற்சியளிக்கப்பட்டு வருகின்ற அதிபர்களை நியமிப்பதற்குரிய பல பாடசாலைகள் காணப்படும் நிலையில் - கடமைநிறைவேற்று அதிபர்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தில் வடமாகாண கல்வியமைச்சு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. பரீட்சையில் சித்தியடைந்தோரை பெரிய பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக ஒன் றுக்கு மேற்பட்ட பலரையும் நியமித்து – வடமாகாண கல்விப் புலத்தை சீரழிக்கும் வகையில் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
அதிபர் தரம் 3 ற்கு வடமாகாணத்தில் தேவையான அதிபர்களின் எண்ணிக்கை 400 ஆகும். இவ்வெண்ணிக்கை மத்திய கல்வியமைச்சுக்கு வழங்கப்பட்டதன் அடிப்படையிலேயே 396 பேர் அதிபர்களாக போட்டிப்பரீட்சையின் மூலம் நியமிக்கப்பட்டு - சிறப்பான பயிற்சி வழங்கப்படுகின்றது. இவர்களது தரமான சேவைகளை வடமாகாணப் பாடசாலைகள் பெற்றுக்கொள்வதற்கு மாறாக – குறுக்குவழியால் வந்தவர்களின் கைகளில் சிக்கி வடமாகாணக் கல்வி பாழடையப்போகின்றது.
இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகளால் வடமாகாணக் கல்வியில் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாக – புதிய அதிபர்களின் பயிற்சி நிலையங்களுக்கு தரிசிப்புக்குச் சென்ற வடக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு புதிய பயிற்சிபெறும் அதிபர்கள் தெளிவுபடுத்தியபோது - இத்தகைய நிலைமையின் பாரதூரமான தன்மையை வடமாகாண கல்வித்திணைக்களம் அறியும் எனவும்;. - ஆயினும் வடமாகாணக் கல்வி - அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கிறது எனவும் - ஆயினும் இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை உயரதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுச் சென்றார் என யாழ்ப்பாணத்தில் அதிபர் பயிற்சியை மேற்கொள்ளும் அதிபர்கள் தெரிவித்தனர்


No comments:

Post a Comment